சேகர் இயல்பு

1972. பத்து வகைய பரதவி ரேவதத்
தத்தகு கால விழிவி னகத்தவர்
சித்தந் தெளிவிலா சீல மடைவிலர்
செத்த வறிவினர் சேக ரவரே.
 
     (இ - ள்.) பத்துவகைய - பரதம் ஐந்தும் ஐராவதம் ஐந்தும் எனப் பத்து
வகையவாகியவற்றில் வைத்து, பரத இரேவதத்து - பரதகண்டம் ஐந்தனுள் வாழ்வோராய்,
அத்தகுகாலம் - அக்கண்டத்துத் தாம் வாழத்தக்க காலமெல்லாம், இழிவின் அகத்தவர் -
இழிந்த குணங்களையுடைய உள்ளமுடையோராய், சித்தம் தெளிவிலர் - அறிவு தெளியப்
பெறாதாராய், சீலம் அடைவிலர் - ஒழுக்கநெறிக்கட் சேராதவராய், செத்த அறிவினர் -
அறிவற்றவராவர், சேகர் அவரே - சேகர் என்று கூறப்படும் வகையினர்,
(எ - று.)
    
     இழிவு - அவஸர்ப்பிணி.

     இரேவதம் - கண்டம். அவை, பரதகண்டம் ஐந்தும் ஐராவதகண்டம் ஐந்தும், என்னும்
பத்து வகைப்படும். அவற்றுள் சேகர் என்பவர் பரத கண்டத்துள் வாழும் ஒரு வகை மனிதர்
என்றுணர்க. செத்த அறிவு - அறிவின்மை.

(862)