1980. அன்ன பிறவியு ளாங்கவ ராபவர்
இன்னுஞ் சிலவ ரிழிகதிப் 1பாற்பட்டுத்
துன்னிய போழ்தே சுருங்கி யொழிபவர்
என்னும் பிறர்க ளறிவிற் கிகந்தார்.
 
     (இ - ள்.) அன்ன பிறவியுள் - அம்மிலைச்சர் பிறப்பினுள், ஆங்கு அவராபவர் -
அவ்விடங்களிலே யாம் முன் கூறியவர்கள் பிறப்பர், இன்னும் சிலவர் - வேறு சிலரும்,
இழிகதிப்பாற்பட்டு - இவ்விழிந்த மிலைச்சர் பிறப்பிற் பிறந்து, துன்னிய போதே -
அப்பிறவியை எய்திய பொழுதே, சுருங்கி - வாழ்நாள் குறுகி, ஒழிபவர் - இறப்பார்,
என்னும் பிறர்கள் அறிவிற்கு இகந்தார் - (இவர் யாரோ எனில்) எவ்வாற்றானும் பிற
சான்றோர் அறிவுரைகளைக் கடந்தவர், (எ - று.)

     செய்வோரும் அன்னபிறவியுள் ஆபவர் எனமுடிக்க. வேறு சிலர் இப்பிறப்பிற் பிறந்து
சின்னாளில், இறந்து மீள்வர் என்க.

(870)