1983. | நல்ல நிலங்க ணலங்கொள் வடிவுகள் இல்லை யமர்ந்துழித் தோன்ற லெனவிவை எல்லையில் யோனிக ளெல்லா மிகந்தெய்தல் அல்லியந் தாரோ யரிது பெரிதே. | (இ - ள்.) நல்ல நிலங்கள் - அறநெறி நிற்றற்கியைந்த சிறப்புடைய நாட்டிலே பிறத்தலும், நலங்கொள் வடிவுகள் - அகம் புறங்களிலே ஊனமில்லாத மனித உடலைப் பெறலும், இல்லை அமர்ந்துழி - இல்லறத்தை விரும்புமிடத்தே, தோன்றலும் - பிறத்தலும், எனஇவை - என்று கூறப்பட்ட இப் பேறுகளை, எல்லையில் யோனிகள் எல்லாம் இகந்து - அளவிறந்த ஏனைய பிறவிகளைக் கடந்து, எய்தல் - அடைதல், அல்லியந் தாரோய் - தாமரைமலர் மாலையை உடையோனே, பெரிது அரிது - மிக்க அருமையே யாம், (எ - று.) இல்லை அமர்ந்துழி - இல்லிலிருந்து செய்யும் அறத்தை விரும்பும் இயல்புடைய தாய் தந்தையரிடத்தே என்றபடி. உலகில் ஒழுக்கமின்றி விலங்குபோல மனித வகுப்பினர் இருத்தலால் அவ்வகுப்பிற் பிறவாமல் இல்லற முதலியவற்றை வரைந்து வாழும் வகுப்பிடைப் பிறத்தலும் அரிதென்க. | ( 873 ) | | |
|
|