1984. | அண்ணை யலிகுரு டாதி யவர்களை மண்ணுயர் ஞாலத்து 1மானுட ராகவைத் தெண்ணுநர் யாருள ரெல்லா மமையினும் பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே. | (இ - ள்.) அண்ணை அலி குருடு ஆதியவர்களை - மருள்பேடு குருடு முதலிய பிறப்பினர் ஆகியவர்களை, மண் உயர் ஞாலத்து - மண் திணிந்துயர்ந்த உலகத்தே, மானுடராக வைத்து - மனிதர் என்று, எண்ணுநர் - கருதுவார், யார் உளர் - யாரே இருக்கின்றனர், எல்லாம் அமையினும் - நல்ல நில முதலிய எல்லா நன்மைகளும் அமையப் பெற்றுத் தோன்றிய விடத்தும், பெண்ணின் பிறவியும் பீடு உடைத்தன்று - பெண்ணாய்ப் பிறக்கும் பிறப்பும் பெருமை உடையதாகாது, (எ - று.) பெண்ணின் பிறப்புப் பீடுடைத்தன்று, என்று கோடல் சைனர்கள் கொள்கை என்க. | (874) | | |
|
|