1987. குழவி யருஞ்சுரஞ் சென்று குமர
வழுவ 3வடவி யரிதி னிகந்தால்
கிழவெனு மெல்லை கெழீஇயினர் சார்ந்து
வழுவினர் செல்வது மற்றோர் கதியே.
 
     (இ - ள்.) குழவி அருஞ்சுரம் சென்று - குழவிப்பருவம் என்னும் கடத்தற்கரிய
பாலைநிலத்தைக் கடந்து, குமர அழுவ அடவி - இளமைப் பருவம் என்னும் ஆழ்ந்த
குழிகள் அமைந்த காட்டினை, அரிதின் இகந்தால - அரிதிற்சென்று கடந்தால், கிழவு எனும்
எல்லை கெழீஇயினர் சார்ந்து - கிழப்பருவம் என்னும் எல்லையை அண்மி அடைந்து,
வழுவினர் - அப்பருவத்தினின்றும் அகன்று இறந்தவர்கள், செல்வது மற்றோர் கதி -
அடைவது வேறு பிறப்பாம், (எ - று.)

     இவ்வாறே பிறவி உருளையிற் சுழலும் உயிர் என்பதாம்.

(877)