மக்கள் விரதங்களால் எய்தும் பயன்

1990. இன்ன நிலைமை யிதனுட் பிறந்தவர்
மன்னுமொன் றுண்டு வதத்தாற் பெறுவது
பொன்னியல் சேர்கற்ப போக 2நிலங்களில்
துன்னு முயற்சி துணியுந் திறமே.

       (இ - ள்.) இன்ன நிலைமை - இத்தன்மையுடைய, இதனுள் - இவ்வில்லறத்துள்ளே,
பிறந்தவர் - மனிதராகத் தோன்றியவர், வதத்தாற் பெறுவது ஒன்று உண்டு -
விரதங்களாலே பெறுவதற்குரிய உறுதி ஒன்றுளதாம், (அஃதியாதெனில்) பொன் இயல்சேர் கற்ப போக நிலங்களில் - அழகிய இயல்புடைய கற்பம் என்னும் இன்ப உலகங்களிலே, துன்னும் முயற்சி- எய்தும் நன்முயற்சியை, துணியும் திறமே - தெளிந்து செய்யும் தன்மை உடைமையாம்(அது), (எ - று.)

     அரியதும் இன்பற்றதுமாகிய மக்கட் பிறவியிற் பிறந்தார்க்கு உறுதியுமுளது, அது
யாதெனில் போகநிலத்தே பிறத்தற்குரிய முயற்சியைத் துணிதலாம், என்க.

(880)