ஏற்பவர்க்கு ஏற்ற குணம்

1994. துறவி யடக்கை 1பிறர்க்குநன் றாற்றல்
உறவினர்க் கோம்புதன் மெய்த்தலைப் பாடென்
றறிவ ரறைந்தாங் கறைந்தனன் றானங்
குறைவில னேற்பவற் கேற்ற குணனே.
 
     (இ - ள்.) துறவி - துறவுடைமை, அடக்கை - அடக்கமுடைமை, பிறர்க்கு நன்று
ஆற்றல் - பிறர்க்கு இனிய செய்தல், உறவினர்க்கு ஓம்புதல் - சுற்றத்தாரைப் பேணல்,
மெய்த் தலைப்பாடு - மெய்யுணர்தலிற் றலைப்படுதல், என்று அறிவர் அறைந்தாங்கு
அறைந்தனன் - எனச் சான்றோர் - கூறியவாறே யான் உனக்குக் கூறாநின்றேன், தான்
அங்கு உறைவிலன் - ஈவோனிடத்துத்தான் சென்று உறைதலிலனாய், ஏற்பவற்கு -
இரப்பவனுக்கு, ஏற்ற குணனே - தகுந்த குணங்களை, (எ - று.)

     துறவி - துறவு.

     இரப்பவன் துறவு முதலிய குணங்கள் உடையனாதல் வேண்டும்
என்பதாம்.

(884)