உண்டி கொடுத்தோர்க் குறுபயன்

1997.

கடைநின் 3றவருறு கண்கண் டிரங்கி
உடையதம் மாற்றலி னுண்டி கொடுத்தார்
படைகெழு தானைய பல்களி யானைக்
குடைகெழு வேந்தர்க ளாகுவர் கோவே.

     (இ - ள்.) கடை நின்றவர் உறுகண் கண்டு இரங்கி - தன் வீட்டு வாயிலில்
நின்றவர்களின் இன்னலைக் காணுங்கால் மிக்க இரக்கங்கொண்டு,
உடைய தம் ஆற்றலின் உண்டி கொடுத்தார் - தம்முடைய தாளாற்றித் தந்த பொருளாகிய
உணவை இன்னலுறும் அவர்கட்கு வழங்குவோர், படைகெழு தானைய - போர்க்கருவிகள்
மிக்க படையின் கண்ணவாகிய, பல்களியானை - பலவாகிய களிப்பு மிக்க யானைகளோடே,
குடைகெழு - திங்கள் வெண்குடைகளையும் மிக்குடைய, வேந்தர்கள் ஆகுவர் -
மன்னர்களாய்ப் பிறப்பார்கள், வேந்தே - மன்னனே, (எ - று.)

     வறியார்க்கு உண்டி கொடுத்தோர் மன்னராய்த் தோன்றுவர் என்க.

(887)