கடவுள் வாழ்த்து முற்றிற்று.

நூல் நுதலிய பொருள்
2. அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்
வெங்கண் வினைபோழ்ந் திருவச்சரண் சென்ற மேனாள்
பைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த
செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்.
 
     (இ - ள்.) அம் கண் உலகிற்கு அணிவான் சுடராகி நின்றான் - அழகிதாகிய
ஞானக்கண்ணையுடைய, சான்றோர் உலகிற்கு அழகிய பேரொளிப் பிழம்பாகத் தோன்றி
நின்றவனாகிய சிரேய தீர்த்தங்கரருடைய; வெங்கண் வினை போழ்ம் - தறுகண்மையுடைய
வினைகளைப் பிளந்து தீர்க்கும் மாண்புடைய; திருவச்சரண் - அழகிய திருவடிகளினது
அருளாட்சி; சென்ற மேல் நாள் - இடையூறின்றி நிகழ்தற்கு இடமான பண்டைக் காலத்திலே; பைங்கண் மதர்வைப் பகுவாய் அரியேறு போழ்ந்த - பசிய
கண்களையும் செருக்கினையும் பிளவுபட்ட வாயினையும் உடையதொரு கொடிய ஆண்
சிங்கத்தினைப் பிளந்து உலகினை உய்யக்கொண்ட; செங்கண் நெடியான் - இயல்பாகவே
சிவந்த கண்களையுடையவனும் இசையாலே நீண்டவனும் ஆகிய திவிட்டனது, சரிதம் இது
செப்பல் உற்றேன் - வரலாறாகிய இச்சிறந்த நூலினை யான் கூறத்தொடங்கினேன்.

     உலகம் என்றது ஈண்டுச் சான்றோரை. அங்கண் என்றது, அச்சான்றோர் தம்
ஞானக்கண்களை. தீர்த்தங்கரர் சான்றோர் ஞானக்கண்ணிற்கன்றிக் காணப்படாமைபற்றி
அங்கண் உலகிற்குச் சுடராகி நின்றான் என்றார்; அழகிய பேரொளிப் பிழம்பென்பார், அணிவான் சுடர் என்றார். வெங்கண் - தறுகண்; கண்ணோட்டமில்லாத கண். உயிர்களின்
துயர்க்கெல்லாம் காரண மாதல்பற்றி வெங்கண் வினை என்றார். வினை ஈண்டு
ஞானாவரணீயம் முதலியன. திருவச்சரண் - அழகிய அடிகள். அடி செல்லுதலாவது -
அத்தீர்த்தங்கரருடைய உபதேச மொழிகள் மக்கள் நெஞ்சத்தே நடத்தல். இச்செய்யுளில்
அணிவான் சுடராகி நின்றான் எனக் குறிப்பிடப்பட்டவர், சிரேய தீர்த்தங்கரர் என்பவர்;
இவர் இருபத்து நான்கு தீர்த்தங்கரருள் வைத்துப் பதினொராந் தீர்த்தங்கரராவர். திவிட்டன்
இத்தீர்த்தங்கரர் உபதேச மொழிகள் சிறப்படைந்திருந்த காலத்தே வாழ்ந்தவன் என்பர்.
சமணர்கள் இங்ஙனம் வரலாற்றுக் காலத்தைக் குறிப்பிடும் வழக்கமுடையர் என்பதனை,
 
  “நாத னம்முனி சுவ்வத னல்கிய
தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள்
ஏத மஃகி யசோதரன் எய்திய
தோத வுள்ள மொருப்படு கின்றதே“
 
    எனவரும் யசோதர காவியத்துப் பாயிரத்தானும் (2) உணரலாம்.

     வெங்கண் வினைபோழ்ந்து சிரேய தீர்த்தங்கரர் உலகினை உய்யக் கொண்ட நாளிலே
அரியேறு போழ்ந்து திவிட்டன் உயிரச்ச நீக்கி உய்யக்கொண்டனன் என்னுமிக்கருத்தின்
நயமுணர்ந்து மகிழ்க. திவிட்டன் அரியேறு போழ்ந்து உயிரோம்பிய வரலாற்றினை
இந்நூலிற் (7) சீயவதைச் சருக்கத்தால் உணர்க. சரிதம் என்பது, புண்ணிய சரிதம் என்பது
படநின்றது. எனவே இந்நூலாசிரியர் இதனை இயற்றியதற்குரிய காரணமும் கூறினாராதல்
நுண்ணிதிற் காண்க.

     அரியேறு போழ்ந்தமையால் - திவிட்டனுடைய தெறற்சிறப்பும் செங்கண்
என்றமையால் அவனுடைய அளிச்சிறப்பும், பெறவைத்தார். செங்கண் என்றது இயல்பாகவே
சிவந்த அருட்கண் என்பதுபட நின்றது.

     நெடியான் என்றது - இசையாலே நீண்டவன் என்பது படநின்றது. மேலும் திவிட்டன்
திருமாலின் கூறுடையோன் என்பதனையும் உணர்த்திநிற்றல் உணர்க. நெடியான் சரிதம்
என்றது, இது செப்பற்கரியது என்பது படநின்றது. எனவே, இதனை யான் ஆசைபற்றி
அறையலுற்றேன் என்பார் இது செப்பலுற்றேன் என்று எடுத்தோதினர்.

இனி - வெங்கண் வினை போழ்ந்து இருவ, சரண் சென்றநாள் என்று
கண்ணழித்துரைப்பினும் அமையும்: இருவ - இருத்த, என்க. சரண் - சரணம்; அஃதாவது
சமவசரண் என்பாருமுளர்.

 (2)