அருகக்கடவுளின் திருவடிகளே பிறவிப்பிணியை
ஒழிக்கும் என்றல்

200. காதியங் கிளைகள் சீறுங் காமரு நெறிக்குங் கண்ணாய்ப்
போதியங் கிழவர் தங்க டியானத்துப் புலங்கொண் டேத்தி
யாதியந் தகன்று நின்ற வடிகளே சரணங் கண்டாய்
மாதுய ரிடும்பை தீர்க்குஞ் சரணெனப் படுவ மன்னா.
 

     (இ - ள்.) மன்னா - அரசனே!; காதி அம்கிளைகள்சீறும் - ஞானா வரணீயம்,
தரிசனாவரணீயம், அந்தராயம், மோகனீயம் என்னுங்காதி கருமக் கூட்டங்களை
யொழிக்கின்ற, காமருநெறிக்கும் - அழகிய வீடுபேற்று வழிக்கும், கண்ணாய் -
பற்றுக்கோடாய், போதிஅம்கிழவர் தங்கள் தியானத்துப் புலம் கொண்டு ஏத்தி -
மெய்யறிவுக்கு உரியவர்களான அடியவர்களால் தங்கள் அறிதுயில் நிலைக்கண்
அறிவாற்கண்டு போற்றப்பெற்று, ஆதிஅந்து அகன்றுநின்ற - முதலும் முடிவும் இல்லாமல் விலகிநின்ற, அடிகள் - அருகக்கடவுளது, சரணே - திருவடிகளே, மாதுயர் இடும்பை
தீர்க்கும் சரண் எனப் படுவ - மிக்க துன்பத்தைச் செய்யும் பிறவித்துன்பங்களை
யொழிக்கின்ற அடைக்கலமென்று சொல்லப்படுவன, கண்டாய் - நீ உணர்ந்து கொள்வாயாக,
(எ - று.)

      அருகக்கடவுளின் திருவடிகளே உயிர்கட்குக் கொடிய பிறவித்
துன்பங்களைப்போக்கும்புகலிடமாம் என்க. கடவுட்குப் பிறப்பும் இறப்பும் இல்லையாதலால்,
'ஆதியந் தகன்று நின்ற
அடிகள்' என்றார்.

      ஞானாவரணீயம் - அறிவை மறைப்பது. தரிசனாவரணீயம் - காட்சியை மறைப்பது.
அந்தராயம் - நற்பயன்களை விலக்குவது. மோகனீயம் - மோகத்தைவிளைப்பது.
அருகக்கடவுள் வீடுபேற்று வழியை முதன்மறை களைக்கொண்டு விளக்கியதனால்
அந்நெறிக்குக் 'கண்ணாய்' எனப்பட்டார். கிழவர் - உரிமை யுணர்த்தும் கிழமையென்னும்
பண்பினடியாகப் பிறந்த பெயர். போதி - அறிவு. போதியங்கிழவர் - மெய்யறிவுடைப்
பெரியார்.

( 82 )