இதுவுமது

2004. தவஞ்செய்து வந்தார் தவநிலை நிற்பார்
அவஞ்செய்து வந்தார்க் கரிது பெரிதும்
பவஞ்செய்து மாக்கள் பரியு மதுதான்
1எவன்செய்து மென்னை யீர்மலர்த் தாரோய்.
 
     (இ - ள்.) தவம் செய்து வந்தார் - கழிந்த பிறவிகளிலே தவநெறியிற் பயின்றடிப்பட்டு
இப்பிறவியில் பிறந்தவர்களே, தவநிலை நிற்பார் - தவநெறியிலே உறுதியுடன் நிற்கும்
ஆற்றலுடையோர் ஆவர், அவம்செய்து வந்தார்க்கு - அவ்வாறன்றி முற்பிறவிகளிலே தவம்
அல்லாதவற்றைப் பயின்று வந்தவர்களுக்கு, பெரிதும் அரிது - அத்தவ நிலைநிற்றல்
பெரிதும் இயலாதாம், செய்தும் என்னை - ஆதலின் இவர் இத்தவம் செய்தும் யாது
பயன்பெறவல்லார், ஈர்மலர்த்தாரோய் - தண்ணிய மலர் மாலையணிந்த மன்னனே, பவம்
செய்து - தீவினைகளையே செய்து, மாக்கள் - அறிவிலிகள், பரியும் அதுதான் எவன் -
அவற்றின் பயனாகிய துன்பத்தை நுகருங்கால் பரிவுகொள்வது யாது கருதியோ, (எ - று.)

     பவம் : ஆகுபெயர்

     “தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
     யஃதிலார் மேற்கொள் வதுÓ  என்னும் திருக்குறட் கருத்தை ஈண்டுக் காண்க.

     முன்னர்த் தீவினைசெய்து அதன் பயனை நுகருங்கால் அல்லற் படுவதெவன்
என்றார், என்க.

(894)