புண்ணிய வாயில்கள் பிறவும் உளவெனல்

2007.

புண்ணிய வாயி லெனநாம் புகழ்ந்துரை
கண்ணிய நான்கா 2யடங்கினுங் காவல
நுண்ணிய நூல்வழி நோக்கி நுனித்தவர்
எண்ணிய வாயில்க ளின்னு முளவே.
 
     (இ - ள்.) புண்ணிய வாயில் என - கற்ப உலகங்களை அடைதற்குரிய
நல்வினையாகிய வழிகள் என்று, நாம் - யாம், புகழ்ந்து உரை கண்ணிய - புகழ்ந்து
மொழிந்தமையாலே கருதப்பட்டவை, நான்காய் அடங்கினும் - தன்னியல் தானம் தவம்
பூசனை என்னும் நான்கு வகையானே அடங்குவனவானாலும், காவல - அரசனே, நுண்ணிய
நூல்வழி - நுண்பொருள்களையுடைய மெய்ந்நூல் வாயிலாய், நோக்கி - பார்த்து, நுனித்தவர்
- ஆராய்ந்த சான்றோர், எண்ணிய வாயில்கள் - கருதிய வழிகள், இன்னும் பல உள -
இவையிற்றின் வேறாய்ப் பலவுளவாம், (எ - று.)

(897)