இரத்தினத் திரயம்

201. மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
யிப்பொரு ளிவைகள் கண்டா யிறைவனால் 1விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய்.
 

     (இ - ள்.) கனபொன்தாரோய் - சிறந்த பொன் மாலையை அணிந்தவனே!,
மெய்ப்பொருள் தெரிதல் - உணர வேண்டிய மெய்ப்பொருள் களை உள்ளவாறுணர்தலும்,
மற்று - பின்பு, அப்பொருள் மிசைவிரிந்த ஞானம் - அப்பொருள்களின் மேலே நன்றாகத்
தெளிந்த அறிவும், அப்பொருள் வழாத - அவ்வாறு தெளிந்த பொருள் நீங்காதனவாக;
தாங்கி - மனத்தில் நிலைபெறுத்தி, நூலின் அருந்தகை ஒழுக்கம் - ஆகமங்களிற் கூறிய
பெறுதற்கரிய விழுப்பத்தைப் பயக்கும் நல்லொழுக்க வழியில் நிற்றலும், இவைகள் கண்டாய்
- இவைகள் மூன்றுமே, இறைவனால் விரிக்கப்பட்ட - அருகக்கடவுளால்
விரித்துரைக்கப்பட்டன, இப்பொருள் - இந்த மேலான பொருளை, கைப்பொருளாகக்
கொண்டு கடைப்பிடி - கையிற் பெற்ற செல்வமாக நினைத்து மறவாமல் உறுதியாகப்
பற்றுவாயாக! (எ - று.)

     நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்ற இரத்தினத் திரயம் இங்கு
உணர்த்தப்பட்டன. நன்ஞானமாவது பொருள்களின் தன்மைகளை உள்ளபடி உணர்தல்.
நற்காட்சியாவது உண்மைப் பொருள்களை ஐயந்திரிபறத் தெளிதல். நல்லொழுக்கம்
அணுவிரதமென்றும் மகாவிரதம் என்றும் இருவகைப்படும். இவற்றில், முன்னையது
இல்லறத்தார்க்கும் பின்னையது துறவறத்தார்க்கும் ஆம்.

“மெய்வகை தெரிதன் ஞானம் விளங்கிய பொருள்க டம்மைப்
பொய்வகை யின்றித் தேறல் காட்சிஐம் பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்க மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியுமென்றான்“
என்றார் திருத்தக்க தேவரும்.

நன்ஞானம், மதிஞானம், சுருதிஞானம், அவதிஞானம் மனப்பரியய ஞானம், கேவல ஞானம்
என ஐந்தாக விரிதலின் விரிந்த ஞானம் என்றார். இவை ஒவ்வொன்றும் மிகப்பலவாம்.

( 83 )