தியானம் | 2015. | சென்று பெருகுந் தியான நிகழ்ச்சியும் ஒன்ற வுரைப்பி னொருநால் வகைப்படும் நன்றியின் 2மாற்றினை நல்குமிரண் டல்லன வென்றி விசும்பொடு வீடுந் தருமே. | (இ - ள்.) சென்று பெருகும் தியான நிகழ்ச்சியும் - பயிலும் தோறும் உயர்ந்து பெருகும் தன்மைத்தாய தியானநிகழ்ச்சி தானும், ஒன்ற உரைப்பின் பொருந்தக் கூறுங்கால், ஒருநால் வகைப்படும் - நான்கு பகுதித்தாம், இரண்டு நன்றியில் மாற்றினை நல்கும் - அவற்றுள் இரண்டு நன்மையில்லாத பிறப்பிறப்பினையே தருவனவாம், அல்லன - எஞ்சிய இரண்டும், வென்றி விசும்பொடு - வெற்றியை உடைய சுவர்க்கத்தோடு, வீடும்தரும் - அழிவில்லாத வீட்டின்பத்தையும் கொடுக்கும், (எ - று.) மாற்று - பிறப்பிறப்பு ; மாறும் இயல்புடைமையின் மாற்றென்றார் ; தியானம் :- ஆர்த்தம் இரௌத்திரம் தருமம் சுக்கிலம் என நான்கு வகைப்படும். அவற்றுள் முன்னைய விரண்டும் பிறப்புக்குக் காரணமாம், பின்னைய இரண்டும் முறையே துறக்கத்தையும் வீட்டையு நல்கும் என்பதாம். ஆர்த்தத் தியானமாவது :- அன்புடையோர் இறக்கும்போதும் பகைவர் செழிப்புறும் போதும், இடுக்கண்கள் மிக்கபோதும் துறக்கவின்பத்தே அவாவுற்றபோதும் எழுகின்ற அவாவோடு கூடிய நினைவுத் தொடர். இதற்குப்பயன், விலங்குகளாகப் பிறத்தலாம். இரௌத்திரத் தியானமாவது :- கயமைத் தொழில்களிலே ஆனந்தமடையும் ஓரியல்புடையனாய் அவற்றைப் பற்றியே தொடர்ந்து நினைவுண்டாதல். இதற்குப் பயன், நிரயம் எய்துதலாம். இவ் விரண்டையும் துன்பத்தியானம் என்றும் கூறுப. இனி, தர்மத் தியானமும், சுக்கிலத் தியானமும் இன்பத் தியானம் என்ப. இவற்றுள், தர்மத்தியானம், கற்ப உலகங்களை எய்துவிக்கும் ; சுக்கிலத் தியானம் வீட்டின்பத்தைத் தரும் என்ப. இவற்றின் விரிவெல்லாம் விரிந்த நூல்களுட் காண்க. | (905) | | |
|
|