(இ - ள்.) மன்னா - அரசனே!, உற்று அடுபிணியும் - உடலிற்சேர்ந்து மிக வருத்துகின்ற நோய்களையும், மூப்பும் - முதுமைத் தன்மையையும், ஊழ்உறுதுயரும் - ஊழ்வினைப் பயனால் நேருகின்ற துன்பங்களையும், நீக்கி - ஒழித்து, சுற்றி நின்று உலகம் ஏத்தும் - சூழ்ந்து நின்று உயர்ந்தவர்களால் போற்றப் பெறுகின்ற, சுடர்ஒளி உருவம் தாங்கி - விளங்குகின்ற ஒளிவடிவான உருவத்தை யடைந்து, பெற்றதோர் வரம்பில் இன்பம் பிறழ்வு இலாநிலைமை - பெறுவதாகிய ஒப்பற்ற எல்லையில்லாத இன்பத்தினின்று என்றும் மாறுதலில்லாதவீடு பேற்று நிலையை அடைதலே, அவை நிறைந்த மாந்தர் - முற்கூறிய நன்ஞானம் முதலிய அந்த மூன்றும் நிரம்பப் பெற்ற மனிதரால், பெறப்படும் நிலைமை - அடையப் பெறுகின்ற நிலையாம், கண்டாய் - அறிவாயாக, (எ - று.) கண்டாய் என்பது தேற்றப் பொருள் தந்து நின்றது. மற்று : அசை. கீழ்க்கூறிய இரத்தினத் திரயத்தினாலாகும்பயன் வீடுபேற்று நிலையென் பதையும், அந்நிலையின் இயல்பையும் இச்செய்யுளால் உணர்த்தினார். ஊழாவது - இருவினைப்பயன் செய்த உயிரையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி. இது விதி எனவும் கூறப்பெறும். |