தீர்த்தங்கரர்

2022.

தீர்த்தஞ் சிறக்குந் திருமறு மார்பரும்
பேர்த்துப் பிறவாப் பெருமை பெறுநரும்
ஓர்த்திவ் வுலகினு ளுத்தமர் மற்றவர்
தார்த்தங்கு மார்ப தவத்தின் வருவார்.
 
     (இ - ள்.) தீர்த்தம் சிறக்கும் திருமறு மார்பரும் - பரமாகம வுணர்ச்சியானே
சிறப்புடைய திருமகளாகிய மறுவை அணிந்த மார்பையுடையவரும், ஓர்த்து பேர்த்துப்
பிறவாப் பெருமை பெறுநரும் - ஆராய்ந்து மீண்டும் இவ்வுலகத்தே பிறவாமைக்கு ஏதுவாகிய துறவறத்தே தலைநின்ற சிறப்பை எய்தியவரும், இவ்வுலகினுள் உத்தமர் - இம்மண்ணுலகத்திலேயே வாழும் தீர்த்தங்கரர் ஆவர், தார் தங்குமார்ப - மாலைமார்பனே, மற்றவர் - அவ்வுத்தமர்கள், தவத்தின் வருவர் - முற்பிறவிகளிலே ஆற்றிய தவப்பயனால், இவ்வுயரிய பிறப்பிலே தோன்றுவார், (எ - று.)

     தீர்த்தம் - பரமாகமம் தீர்த்தம் சிறப்போரும், பேர்த்துப் பிறவாப் பெருமை
பெறுவோரும் தீர்த்தங்கரர் ஆவர். இவர்கள் தவப்பயனாலே பிறந்தோர் என்க.

(912)