2024.

உத்தமர்க ளேனையிடை யோர்கள்கடை யோரம்
முத்தகைய ராவரவர் மூரிநெடு வேலோய்
பத்துவகை 1மாதவ மியற்றிய பயத்தால்
அத்தகைய செய்கையு மவர்க்கனைய கண்டாய்.
 
     (இ - ள்.) மூரி நெடுவேலோய் - வலிய நீண்ட வேற்படையையுடைய மன்னனே !,
உத்தமர்கள் ஏனை இடையோர்கள் கடையோராம் - தலையாயவரும் ஒழிந்த
இடையாயவரும் கடையாயவரும் என்னும், முத்தகையர் ஆவர் அவர் - மூன்று வகையினர்
ஆவர் அப்போகமனிதர், பத்துவகை மாதவம் இயற்றிய பயத்தால் - தலைப்பொறை முதலிய
பத்துவகை அறவொழுக்கமுடைய சிறந்த தவத்தைப்புரிந்த பயனாலும், அத்தகைய செய்கை -
அவ்வாறாய செயல்களானும் வேற்றுமை யுண்மையின், அனைய அவர்க்கு கண்டாய் -
அத்தகைய மூவகைப் பாகுபாடுகள் உளவாயின அவர் தம்முள், (எ - று.)
    போக மனிதர் தலை யிடைகடை என மூவகைப்படுவர். அப்பகுப்பு அவர் தவப்
பெருமை சிறுமைபற்றி வந்தது என்க.

(914)