அறிவுரை கேட்டோர் மகிழ்ச்சி யடைதல்

203. அருந்துய ரறுக்கு மாண்பி னாரமிர் தவைகண் மூன்றும்
திருந்தநன் குரைப்பக் கேட்டே தீவினை யிருள்கள் போழும்
விரிந்தநல் லறிவின் சோதி விளங்கலிற் சனங்க ளெல்லாம்
1பரிந்தகங் கழுமத் தேறிப் பவம் 2பரிந் தவர்க ளொத்தார்.
 

   (இ - ள்.) அருந்துயர் அறுக்கும் மாண்பின் - கெடுத்தற்கரிய பிறவித் துன்பங்களைக்
கெடுக்கும் பெருமையுடைய, ஆர் அமிர்து அவைகள் மூன்றும் - அருமையான அந்த
இரத்தினத் திரயத்தை, திருந்த நன்கு
உரைப்பக் கேட்டு - கேட்பவர் மனம் நன்றாக ஒழுங்குபடுமாறு சொல்லக்கேட்டு, தீவினை
இருள்கள் போழும் - கொடிய கருமங்களாகிய இருள்களை யழிக்கவல்ல, விரிந்தநல்
அறிவின்சோதி விளங்கலின் - பரந்த மெய்யறிவுச் சுடர்விளக்கமாகப் பெற்றதனால்,
சனங்கள் எல்லாம் - அவ்வறி வுரையைக்கேட்ட மக்களனைவரும், அகம்கழுமத்தேறி -
உள்ளம் நன்கு தெளிந்து, பரிந்து - மகிழ்ந்து, பவம்பரிந்தவர்கள் ஒத்தார் - பிறப்பு நீங்கப்
பெற்றவர்களை யொத்தனர், (எ - று.)

அறிவுரையைக் கேட்டோர் வீடுபெற்றாற் போன்ற பேரின்பத்தை யடைந்தார்கள் என்பதாம்.
இங்கு, சனங்கள் என்றது அரசனுடன் வந்தவர் களை. உறுதி பயத்தலாகிய இன்பத்தை
உயிர்க்குச் செய்தலால் இரத்தினத் திரயத்தை அமிர்து என்றார். கழுமல் - மிகுதி, நிறைதல்.
தேறுதல் - கலக்கம் ஒழிந்துதெளிதல். பரிதல் - மகிழ்தலும், அறுத்தலும்.

( 85 )