2032. | நையுமென நின்றவிடை யாள்குணமோர் நான்கும் வையமகிழ் 4காளையிவன் மாண்டகுண நான்கும் ஐயென வகன்றன வணைந்தனர் கனிந்தார் மெய்யுமிடை வுற்றவிது வால்விதியின் வண்ணம். | (இ - ள்.) நையும் என நின்ற இடையாள் குணம் ஓர் நான்கும் - முலைமுதலியவற்றைச் சுமக்கலாற்றாது இது மிக வருந்தா நிற்கும் என்று கூறும்படி நுணுகிய இடையையுடைய இத்தலைமகட்குச் சிறந்த நாணம் முதலிய பெண்மைக் குணங்கள் நான்கும், வையம் மகிழ்காளையிவன் மாண்டகுணம் நான்கும் - உலகம் மகிழ்தற்குக் காரணமான பண்புகளையுடைய இத்தலை மகனுக்குச் சிறந்த அறிவு முதலிய நான்கு ஆண்மைக்குணங்களும், ஐயென அகன்றன - ‘ஐ’ என்னும் மாத்திரையின் விரைந்து அகன்றனவாக, அணைந்தார் - இருவரும் உள்ளப் புணர்ச்சியில் ஒன்றுபட்டனர், கனிந்தார் - காமத்தால் உளம் நெகிழ்ந்தனர், மெய்யும் மிடைவுற்ற - இருவர் உடல்களும் புணர்ந்தன, இதுவால் விதியின் வண்ணம் - இவ்வாறு இவர்தம் ஊழ்வகை இருப்பதாயிற்று, (எ - று.) பெண்மைக் குணங்கள் - நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்பன ; ஆண்மைக்குணம், அறிவு நிறை ஒர்ப்பு கடைப்பிடி என்னும் நான்குமாம். இஃது இயற்கைப் புணர்ச்சி கூறிற்று. | (922) | | |
|
|