2033. அன்றுமுதன் 1மூன்றளவு பல்லமுடி காறும்
சென்றுபெரு கிக்களி சிறந்துநனி காமம்
என்றுமிடை யின்றியிமை யாரினுகர் வார்க்கு
நின்றதுபி ராயமது வேநிழலும் வேலோய்.
 
     (இ - ள்.) அன்று முதல் மூன்று அளவு பல்லம் முடிகாறும் - அந்நாள் தொடங்கி
மூன்று பல்லம் என்னும் கால அளவு முடியுந்துணையும், என்றும் இடையின்றி - இடையில்
ஒரு நாளேனும் வீழ்நாள் படாமல், இமையாரின் - தேவர்களைப் போன்று, காமம் -
காமவின்பத்தை, சென்று பெருகி களி சிறந்து நனி நுகர்வார்க்கு - உளம் ஒன்றுபட்டுச்
சென்று ஒரு நாளைக் கொருநாள் புதிது புதிதாய்ப் பெருகும் மகிழ்ச்சியாற் சிறப்புற்று,
மிகுதியும் நுகரா நின்ற அத்தலைமக்களிருவர்க்கும், பிராயம் அதுவே நின்றது -
அவ்விளமைப் பருவமே நிலைத்து நிற்பதாயிற்று, நிழலும் வேலோய் - ஒளிர்கின்ற
வேலேந்தும் அரசனே, (எ - று.)

     அப்போக பூமியில் மூன்று பல்லகாலம் இளமைப்பருவமே நிற்றலால் பெரிதும் இன்பம்
நுகர்தற்கு ஏதுவாம் என்க.

(923)