அரசன் மெய்யறிவடைதலும் உறவினர் நோன்பு மேற்கொள்ளலும்

204.

மன்னிய முனிவன் வாயுண் மணிகொழித் தனைய வாகிப்
பன்னிய பவங்க டீர்க்கும் 1பயங்கெழு மொழிக டம்மால்
கன்னவில் கடகத் தோளான் காட்சியங் கதிர்ப்புச் சென்றான்
பின்னவ னுரிமை தானும் 2பெருவத மருவிற் றன்றே.
 

     (இ - ள்.) மன்னிய முனிவன் வாயுள் - நல்லறிவு நிலைபெற்ற அந்தச் சமண
முனிவருடைய வாயினின்று, மணி கொழித்து அனைய ஆகி - கொழிக்கப்பட்ட
மணிகளைப்போன்று, பன்னிய பவங்கள் தீர்க்கும் - நூல்களிற் சொல்லிய
பிறப்புக்களையெல்லாம் ஒழிக்கும், பயம்கெழு மொழிகள் தம்மால் - நற்பயன்கள்
பொருந்திய மொழியினாலே, கல்நவில்
கடகத்தோளான் - மலையென்று சொல்லத்தக்கவையும் கடகம் என்னும் வளையை
அணிந்தவையுமாகிய தோள்களையுடைய சுவலனசடியரசன், காட்சி அம்கதிர்ப்புச் சென்றான்
- உண்மைப் பொருளையுணர்தலாகிய அழகிய ஒளிவந்தமையப் பெற்றான், பின் அவன்
உரிமை தானும் - பிறகு அவ்வரசனின் உரிமையானோர் கூட்டம், பெருவதம் மருவிற்று -
பெரிய நோன்புகளை மேற்கொள்ள விரும்பியது, அன்றே- அந்நாளிலேயே, (எ - று.)

அன்றே - ஈற்றசை யெனினுமாம். நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்ற மூன்றனுள்,
நன்ஞானத்தை அரசனுடன் சென்றவர்களும், நற்காட்சியை அரசனும், நல்லொழுக்கத்தை
அரசன் மனைவியர்களும் அடைந்தனர் என்க. வதம் - வ்ரதம் என்ற வடசொல்லின்
விகாரம்.

( 86 )