தேவர் வகை

2040. ஈரைவர் பவணர்களு மிருநால்வர் வியந்தரரும்
ஓரைவர் சோதிடரு மொருபதின்மே லறுவரெனுங்
காரைய முறுகையாய் 1கற்பகரு மீயுலகில்
சீரைய மில்லாத திருமலர்த்தார்த் தேவரே.
 
     (இ - ள்.) கார் ஐயமுறு கையாய் - மேகமும் ஐயப்படத் தக்க கொடைக்கையையுடைய
மன்னனே !, ஈர் ஐவர் பவணர்களும் - பத்துவகைப் பட்ட பவணர் என்றும், இருநால்வர்
வியந்தரரும் - எண்வகைப்பட்ட வியந்தரர் என்றும், ஓர் ஐவர் சோதிடரும் -
ஐந்துவகைப்பட்ட சோதிடர் என்றும், ஒருபதின்மேல் அறுவர் எனும் கற்பகரும் - பதினாறு
வகைப்பட்ட கற்பகர் என்றும், மீ உலகில் - மேலுலகத்தே வாழாநின்ற, ஐயம் இல்லாத சீர்
- ஐயப்படுதற் கிடமில்லாத பெருமையுடைய, திருமலர்த் தார்த் தேவரே -
இந்நால்வகையோரும், கற்பக மலர் மாலையையுடைய தேவர் வகையினராவர், (எ - று.)

     பவணர் வியந்தரர் சோதிடர் கற்பகர் என்னும் நால்வகைப் படுவர் தேவர் என்க.

(930)