2047. | காதலரிற் பிழையாராய்க் கள்ளுன்றேன் கடிந்தகற்றி ஈதலோ டில்லிருக்கு மிளம்பிடியர் 1முதலாயார் ஓதினமுத் தேவரா 2யுயர்ந்தவர்க்கு ளுயர்ந்துளராய்ச 3சோதியும்பே ரெண்குணனுந் துப்புரவுந் துன்னுவரே. | (இ - ள்.) காதலரில் பிழையாராய் - தம்மை மணந்த கணவனுக்குப் பிழை செய்யாதவராய், கள் ஊன் தேன் கடிந்து அகற்றி - கள்ளையும் ஊனையும் தேனையும் உண்ணாதே வெறுத்தொழித்து, ஈதலோடு - இல்லறத்திற்குச் சிறந்த ஈகைச் செயலோடு, இல்லிருக்கும் - இல்லறத்தே நிற்கும், இளம்பிடியர் - இளைய பெண் யானை போன்ற மகளிர்கள், முதலாயார் - முதலியோர் ஓதின, முத் தேவராய் - மேற் கூறப்பட்ட முத்தேவர்களுள்ளே தோன்றுபவராய், உயர்ந்தவர்க்குள் உயர்ந்தவராய் - அவருள்ளும் உயர்ந்தோராய், சோதியும் - ஒளிவட்ட முடைமையையும், பேர் எண்குணனும் - அணிமா முதலிய எட்டுக் குணங்களையும், துப்புரவும் - சிறந்த நுகர்ச்சிகளையும் துன்னுவர் - எய்துவர், (எ - று.) அநந்த ஞானம் முதலிய எண்குணங்கள் வீடுபெற்ற உயிர்க்கும் அருகக்கடவுளுக்கும் உரியன ஆதலின் ஈண்டு எண்குணம் என்றது தேவர்கட்குரிய அணிமாமுதலிய எண்குணங்களை என்றுணர்க. அவை, அணிமா மகிமா கரிமா லகிமா பிராப்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் என்னும் எட்டுமாம். | (937) | | |
|
|