(வேறு)
சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ள எண்ணுதல்

205. மன்னவன் மடமகள் வணங்கி மற்றவ
ரின்னுரை யமுதமுண் டெழுந்த சோதியள்
பன்னியொர் நோன்புமேற் கொண்டு பாங்கினால்
பின்னது முடிப்பதோர் பெருமை 3யெண்ணினாள்.
 

      (இ - ள்.) மன்னவன் மடமகள் - சுவலனசடியரசனுடைய இளமைமிக்க மகளாகிய
சுயம்பிரபை, அவர் இன்உரை அமுதம் உண்டு - அந்த முனிவருடைய இனியமொழியாகிய
அமுதத்தையுட்கொண்டு, எழுந்த சோதியள் - உள்ளத்திலெழுந்த நல்லறிவுக் காட்சியை
யுடையவளாய், வணங்கி - சமணமுனிவரைப் போற்றி, பன்னி - அவர் கூறிய நோன்புகளை
ஆராய்ந்து, ஓர் நோன்பு மேல்கொண்டு - அவற்றில் ஒரு நோன்பைச் சிறந்த தாக எண்ணி,
பின்அது பாங்கினால் முடிப்பது ஓர்பெருமை எண்ணினாள் - பின் அந்நோன்பைத் தான்
முறைப்படி நிறைவேற்றுவதாகிய ஒரு பெருஞ் செயலை உள்ளத்தில் கொண்டாள். (எ - று.)
மற்று - அசை.

சமண முனிவர்களின் அறவுரையைக் கேட்டுக்கொண்டிருந்த அரசன் மகள் சுயம்பிரபை,
தனது தகுதிக்கேற்ப ஒரு நோன்பை மேற்கொள்ளுதற்கு உள்ளத்தில் முடிவு செய்தனள்
என்பதாம். நோன்பின் பெயர் முதலியன பின்னர் விளங்கும்.

( 87 )