2055. இமையாத 1செங்கண்ண ரிரவறியார் பகலறியார்
அமையாத பிறப்பறிய ரழலறியார் 2பனியறியார்
சுமையாகி மணிமாலை சுடர்ந்திலங்கு கெடுமுடியார்
அமையாத நல்லுலகி னகைமணிப்பூ ணமரரே.
 
     (இ - ள்.) இமையாத செங்கண்ணர் - இமைத்தலில்லாத சிவந்த கண்களையுடையராய்,
இரவறியார் - இஃது இராக்காலம் என்றும் அறியமாட்டார், பகல் அறியார் - இது பகற்காலம்
என்றும் அறியமாட்டார், அமையாத பிறப்பு அறியார் - நிலையில்லாத பிறவித்
துன்பத்தையும் அறியமாட்டார், அழல் அறியார் - வெப்பத்தை உணரமாட்டார், பனியறியார்
- பனியாலுண்டாகும் துயரம் உணரமாட்டார், சுமையாகி மணிமாலை சுடர்ந்து இலங்கும்
நெடுமுடியார் - பாரமாக மிக்கு மணிமாலைகள் ஒளிவீசித் திகழ்கின்ற நீண்ட முடியணி
அணிந்தவர் ஆகிய, அமையாத நல்லுலகில் - பெருந்தவம் செய்துடையார்க்கன்றிப்
பொருந்த மாட்டாத நல்ல வானுலகிலே வாழும், நகைமணிப் பூண் அமரர் - விளங்குகின்ற
மணியணிகளையுடைய தேவர்கள், (எ - று.)

     தேவர்கள் இரவு பகலறியார், பிறப்பிறப்பின் துயரறியார், மழை வெயில் பனிகளாலாய
இன்னலிலர் என்க.

(945)