2056. அணுவளவாய்ச் சிறுகுதன்மற்
     றதிநுட்ப மிகப்பெருகல்
நணியவர்போ னினைத்துழியே
     நண்ணுறுதல் விழைதகைமை
பணியினமைத் திடல்குறிப்பிற்
     பலவுருவு நனிகோடல்
துணிவமையு நெடுவேலோய்
     சுடருடைய குணங்களே.
 
     (இ - ள்.) அணுவளவாய்ச் சிறுகுதல் - ஒரு சிறிய துகள் அளவிற்றாய்த்
தன்னுருவத்தைச் சுருக்குதலும், மற்று, அதிநுட்பம் - அவ் வணுவிலும் சிறிய உருக்கோடலும்,மிகப்பெருகல் - அண்டமத்துணைத் தம்முருவைப் பெருகச் செய்தலும், நினைத்துழியே -
தம்மை நினைப்போர் நினைத்தபொழுதே, நணியவர்போல் - அவர்தம்
அண்மையிலிருந்தாரைப் போன்று, நண்ணுறுதல் - அவர்பால் எய்துதல், விழைதகைமை
பணியின் அமைத்திடல் - தாம் விரும்பும் தகுதியுடைய பொருள்களை நினைப்பு
மாத்திரையானே செய்தமைத்துக் கோடல், குறிப்பிற் பலவுருவும் நனிகோடல் - பல்வேறு
வடிவங்களை நினைத்த பொழுதே விரைந்து கொள்ளுதல், துணிவு அமையும் நெடு
வேலோய் - அஞ்சாமை எய்துதற்குக் காரணமான நீண்ட வேலையுடைய அரசனே,
சுரருடைய குணங்களே - இவையெல்லாம் தேவர்க்கு அமைந்த பண்புகளாம், (எ - று.)

     தேவர்கள் அணுவளவாகச் சுருங்குதல் பெருகல் நினைத்துழி நண்ணுதல்
விரும்பியவற்றை இயற்றல் பற்பல உருவங்கோடல் முதலிய குணங்களுடையர் என்க.

(946)