2059. செழுந்திரட்பூம் 1பாவைகளுந்
     திகழ் 2மணியின் சுடர்க்கொழுந்தும்
எழுந்திலங்கு 3மேனியரா
     4யெரியுமணிக் கலந்தாங்கி
மொழிந்துலவாக் காரிகையார்
     முலைமுற்றா விளமையார்
அழிந்தலராக் காரிகைமா
     ரமரரசர் தேவியரே.
 
     (இ - ள்.) செழுந்திரட்பூம் பாவைகளும் - தாம் கொண்டுள்ள செழித்த மலராலே
புனையப்பெற்ற விளையாட்டுப் பதுமைகளும், திகழ் மணியின் சுடர் கொழுந்தும் -
விளங்குகின்ற மணிகளின் ஒளிக்கதிர்களும், எழுந்து இலங்கும் மேனியராய் - எழுந்து
பரவுகின்ற திருமேனியுடையராய், எரியு மணிக் கலந்தாங்கி - மிளிருகின்ற மணி
அணிகலன்களையும் அணிந்து, மொழிந்து உலவாக் காரிகையார் - கூறிமுடித்தலியலாத
வனப்புடையராய், முலை முற்றா இளமையார் - எப்பொழுதும் முதிராத முலையையுடைய
இளமைப் பருவமே நிலைக்கப்பெற்றவராய், அழிந்து அலராக் காரிகைமார் - அழகழிந்து
பருத்தல் இல்லாத மகளிர்கள் ஆவர், அமரரசர் தேவியர் - தேவ மன்னர்களின்
மனைவிமார்கள், (எ - று.)

     அமரர் தேவியர் இலங்கு மேனியராய்க் கலந்தாங்கி காரிகையுடைய ராய் இளமை மாறாதவராய்த் திகழ்வர் என்க.

(949)