அரசன் முனிவரை வணங்கிக் கோயிலை வலஞ்செய்து
செல்லுதல்

206. முனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன்
பனிமலர் விரவிய படலை மார்பினான்
கனிவளர் பொழிலிடைக் கடவு ணன்னகர்
இனிதினின் வலமுறை யெய்தி யேகினான்.
 

     (இ - ள்.) தேன்மூசு - வண்டுகள் மொய்க்கப்பெற்ற, பனிமலர் விரவிய படலை மார்
பினான் - குளிர்ந்த பலவகை மலர்களைக் கொண்டுகலந்து தொடுக்கப்பெற்ற
தளிர்மாலையை அணிந்த மார்பையுடையவனாகிய சுவலனசடியரசன், முனிவரர் திருந்து
அடிவணங்கி - அம்முனிவர்களுடைய அழகிய திருவடிகளைப் போற்றி,
கனிவளர்பொழிலிடைக் கடவுள் நல்நகர் - பழங்கள் நிறைந்த சோலையிலுள்ள அருகக்
கடவுளினது சிறந்த திருக் கோயிலை, இனிதினின் வலம் முறைஎய்தி - மகிழ்ச்சியோடு
முறைமையாக வலஞ்செய்து, ஏகினான் - அவ்விடத்தைவிட்டுச் செல்லலானான் (எ - று.)

அருகக்கடவுளை வணங்கியபின், எதிர்பாராது வந்து தோன்றிய சமண முனிவர்களிடம்
அருளுரையும் பெற்றுக்கொண்ட அரசன், முனிவர்களை வணங்கி அவர்களுடைய
உடன்பாடு பெற்றுக்கொண்டு திருக்கோயிலையும் வலஞ்செய்து அவ்விடத்தை விட்டு
அப்பாற் செல்லுகின்றான்.

( 88 )