2071. | பிறவிச்சக் கரமிது பெரிது மஞ்சினான் துறவிக்கட் டுணிகுவன் றுணிந்து தூயனாய் உறவிக்க ணருளுடை யொழுக்க மோம்பினான் மறவிக்க ணிலாததோர் மாட்சி யெய்துமே. | (இ - ள்.) பிறவிச் சக்கரம் இது - மீண்டுமீண்டும் பிறந்தும் இறந்தும் சுழல்வதாகிய பிறப்பென்னும் இவ்வின்னல்தரும் உருளையின்கட் பட்டுழல்வதனை, பெரிதும் அஞ்சினான் மிகவும் அஞ்சுகின்ற ஒருவன், துறவிக்கட் டுணிகுவன் - இவ்வுருளையினின்றும் உய்தற்குரிய நெறியாகிய துறவொழுக்கத்தை மேற்கொள்ளத் துணிவான், துணிந்து - அவ்வாறு துணிந்து பின்னர், தூயனாய் - பொறியடக்கம் முதலியவற்றானே தூயனாகி, உறவிக்கண் அருளுடைய ஒழுக்கம் ஓம்பினான் - மெய்யுணர்ச்சி பொருந்தும் நெறிக்கண்ணின்று அதற்குரிய நல்லொழுக்கத்தைப் பாதுகாத்தவன், மறவிக்கண் இலாததோர் மாட்சி எய்தும் ஏ - மறநெறிகளிலே சென்று எய்துதற்கு இயலாத ஒப்பற்ற மாட்சிமையாகிய நற்காட்சி நன்ஞானங்களைப் பெறுவான், (எ - று.) துறவி - துறந்தார்க்குரிய நெறி உறவி - மெய்யுணர்ச்சி உறும் நெறி மறவி - தீமை செய்தற்குரிய நெறி. பிறவிச் சக்கரத்திற்பட்டு வருந்தி அதனை அஞ்சினவனே வீடுபேற்றிற்குரிய நெறியை நாடுவன் என்க. | (3) | | |
|
|