இதுவுமது | 2077. | இருட்பிலத் தரும்பட ரெய்திப் பலபுகழ் வருட்டதை 1யிலனலிந் துண்ண வாழ்பவன் பொருட்டகு 2வாயில்பெற் றுய்ந்து போம்வழி உருட்டுவா னொருவனை யுவந்து நாடுமோ. | (இ - ள்.) இருள் பிலத்து - இருள்மிக்க தமப்பிரபை என்னும் தீய நரகத்தில், அரும் படர் எய்தி - பொறுத்தற்கு அரிய இன்னல் எய்தி, பல் புகழ்வு அருள் ததையிலன் - பலவாகிய புகழையும் அருளின் செறிவையும் பெறாத மறலி, நலிந்துண்ண - தன்னை வருத்தித் தின்னா நிற்ப, ஆழ்பவன் - முழுகிக்கிடக்கும் ஒருவன், பொருள் தகு வாயில் பெற்று - மேலைப் புண்ணியப் பொருளாலே தக்கதொரு வழிகாணப்பெற்று, உய்ந்துபோம் வழி அந்நரகத்தினின்றும் தப்பிச்செல்லும் போது, உருட்டுவான் ஒருவனை உவந்து நாடுமோ - மீண்டும் தன்னை அந்நரகத்துள் உருட்டிவிடுகின்ற ஒருவனை விரும்பித் தேடுவானோ, (எ - று.) ஈண்டு அரசனை நரகத்திற் கிடந்துழலும் உயிராகவும், பிறவித் துயரைக் கூற்றுவனாகவும், துறவியின் அறவுரையை அந்நகரத்தினின்றும் உய்ந்து போதற்குரிய வழியாகவும், அவ்வாறு உய்ந்துபோகும் போது மீண்டும் நரகத்திலே உருட்டிவிடுவோர் அமைச்சர் முதலிய கேளிராகவும் கொள்க. இருட்பிலம் - இருண்ட குகையுமாம். | ( 9 ) | | |
|
|