2078. அருஞ்சிறைப் பிணியுழந் தலைப்புண் டஞ்சுவான்
பெருஞ்சிறை தனைப்பிழைத் துய்ந்து போயபின்
கருஞ்சிறைக் கயவர்கைப் பட்டு 3வெந்துயர்
தருஞ்சிறைக் களமது சென்று 4சாருமோ.
 

     (இ - ள்.) அரும் சிறைப் பிணி உழந்து - கடத்தற்கரிய சிறைக் கோட்டத்தே பட்டு
இன்னல் எய்தி, அலைப்புண்டு - அச்சிறை காவலரால் பெரிதும் துன்புறுத்தப்பட்டு,
அஞ்சுவான் - அச்சிறையிடை வதிதலைப் பெரிதும் அஞ்சும் ஒருவன் பெருஞ் சிறைதனைப்
பிழைத்து - அப்பெரிய சிறையின் கட் கிடத்தலை யாதானு மோராற்றாற் றப்பி, உய்ந்து
போயபின் - பிழைத்து ஓடிய பின்னர், கரும் சிறைக் கயவர் கைப்பட்டு - கொடிய
சிறைக்காப்பாளராகிய கயமைத் தொழிலோர் கையில் மீளவும் அகப்பட்டு, வெந்துயர் தரும்
- வெவ்விய துன்பத்தையே தருகின்ற, சிறைக்களமது - அச்சிறைக் கோட்டத்தை, சென்று
சாருமோ - தானே எய்தித் தாங்குதலை விரும்புவானோ, (எ - று.)

ஈண்டுச் சிறை என்றது உடலினை. கருஞ்சிறைக் கயவர் என்றது, அச்சிறையைவிட்டு உயிர்
அகன்று போகாதபடி எப்பொழுதும் கட்டி வைக்கும் இயல்புடைய யான் எனது என்னும்
இருவகைப் பற்றுக் களையுமாம்.
 

( 10 )