அமைச்சர், அரசனை முடியணி களைய வேண்டுதல்

2079. பிணிபடு பிறவிநோய் பெயர்க்கு மாதவம்
துணிபவன் றன்னொடு தொடர்ச்சி நோக்குமோ
அணிமுடி துறமினெம் மடிக ளென்றனர்
மணிமுடி மன்னவற் கமைச்ச ரென்பவே.
 
     (இ - ள்.) பிணிபடு பிறவிநோய் பெயர்க்கும் மாதவம் - கட்டுடைய பிறவியாகிய
துன்பத்தை அகற்றும் சிறப்புடைய தவவொழுக்கத்தை, துணிபவன் -மேற்கொள்ளத் துணிந்த
ஒருவன், தன்னொடு தொடர்ச்சி நோக்குமோ - உடம்பும் மிகையாய தன்னோடு
பிறபொருளின் தொடர்ப்பாட்டையும் எதிர் பார்ப்பானோ, எம்மடிகள் - எங்கள் அடிகளே,
அணிமுடி துறமின் - தாங்கள் அணிந்துள்ள முடியணியை முந்துறத் துறந்தருள்க, என்றனர்
- என்று வேண்டினர், மணிமுடி மன்னவற்கு அமைச்சர் - மணியாலியன்ற முடியினையுடைய
பயாபதி வேந்தனுக்கு அவன் அமைச்சராயினார், (எ - று.)
     “மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
     லுற்றார்க் குடம்பு மிகை“
என்னும் திருக்குறட் கருத்தை இதன்கட் காண்க.

     நோய் எனப் பின்னர் வருதலின் பிணியினைக் கட்டென்றாம் “எல்லாப்
பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாத வழியும், அது சார்பாக விட்டனவெல்லாம்
மீண்டும் வந்து தவத்திற்கு இடையீடாய் மனக்கலக்கம் செய்யும்“ என்ப (பரிமேலழகர் உரை :
திருக் 344) வாகலின் தொடர்ச்சி நோக்குமோ, என்றார்.
 

( 11 )