சமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாகச்
செல்லுதல.

208. 1அகநக ரரைசரோ டரைசன் சென்றபின்
சகதபி நந்தன ரென்னுஞ் சாரணர்
மிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடைப்
பகனகு சுடரொளி படர வேகினார்.
 

      (இ - ள்.) அரைசன் - சுவலனசடியரசன், அரைசரோடு - தன்னைச் சார்ந்த
அரசர்களுடனே, அகநகர் சென்றபின் - தனது நகரத்தினுள்ளே சென்ற பின்பு, சகத்அபி
நந்தனர் என்னும் சாரணர் - சகந்நந்தநன் அபிநந்தநன் என்னும் பெயர்கொண்ட
அம்முனிவர்களிருவரும், மிகநவின்று இறைவனை வணங்கி - மிகுதியான வாழ்த்துரைகளைக்
கூறி அருகக் கடவுளை வணங்கி, விண்ணிடை - விசும்பிலே, பகல்நகு சுடர்ஒளிபடர -
கதிரவனை இகழ்கின்ற தம்மேனியின் பேரொளி எங்கும் பரவ, ஏகினார் - சென்றார்கள்.
(எ - று.)
பொழிலைவிட்டுப் புறப்பட்ட அரசன், தன்னை எதிர்கொண்ட அரசர் களோடு நகரத்திற்குட்
சென்றான். முனிவர்கள் அருகக்கடவுளைப் போற்றி விசும்பாறாத் தமக்கு விருப்பமான
இடத்திற்குச் சென்றனர் என்க. நகர் அகம் என்பது அகநகர் எனச் சொல்நிலை மாறிற்று.
முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. இலக்கணப் போலியெனினுமாம்.
முனிவர்கள் விண்ணிற் சென்றபோது அவர்களுடைய உடலொளி எங்கும் பரவுமாறு
சென்றார்கள்,

( 90 )