2081. பொருளிலார்க் கிவ்வழிப் பொறியின் போகமும்
அருளிலார்க் கறத்தினாம் பயனு நூல்வழி
உருள்விலா மனத்தவர்க் குணர்வும் போன்மனம்
4தெருளிலார்க் கிசைவில டிருவின் செல்வியே.
 
     (இ - ள்.) பொருள் இலார்க்கு - பொருள் இல்லாத நல்குரவாளர்க்கு, இவ்வழி -
இவ்வுலகத்தே, பொறியின் போகமும் - கண் முதலிய பொறிகளால் நுகரப்படும் காட்சி
முதலிய இன்பமும், அருள் இலார்க்கு - அருட்செல்வம் இல்லாத மாக்கட்கு, அறத்தின்
ஆம் பயனும் - அறச் செயலாலே உண்டாகும் பயனும், நூல்வழி - மெய்ந்நூல்களின் வழி,
உருள்விலா மனத்தவர்க்கு - பயிலுதலில்லாத மனத்தையுடைய எளியவர்க்கு, உணர்வும் -
அறிவும், இசைவில போல் - சேர்தல் இல்லையானாற் போன்று தெருள் இலார்க்கு - அறிவு
இலாதவர்க்கு, திருவின் செல்வி - திருமகள், இசைவிலள் - பொருந்துதல் இல்லை, (எ - று.)
     “அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
     கிவ்வுலக மில்லாகி யாங்கு“
     “தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
     னருளாதான் செய்யு மறம்“

என்னும் மெய்ம்மொழிகளை இதன் கருத்துடன் நோக்குக.

திருவின் செல்வி - செல்வம்.

     மாந்தர்க்கு “கற்றனைத் தூறும் அறிவி“ என்பவாகலின் கல்லாதார் அறிவிலர் என்றார்.
பெருஞ் செல்வம் உற்றவிடத்தும் அதனை நெறியறிந்து துய்த்தற்கும் அறிவு வேண்டும்.
அறிவு இல்லாதவர் “ என்னுடைய ரேனும் இலரா“ தல் பற்றித் “தெருளிலார்க்கத் திருவின்
செல்வி இசைவிலள்“ என்றார்.
 

(13)