2083. | புண்ணிய முலர்ந்தபின் பொருளி லார்களைக் கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல் எண்ணில ளிகந்திடும் யாவர் தம்மையும் நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே. | (இ - ள்.) பொருள் இலார்களை - கைப்பொருள் உலர்ந்து நல்கூர்ந்தாராயினாரை, கண்ணிலர் துறந்திடும் - கண்ணோட்டம் இலராய் அகற்றி விடுகின்ற, கணிகை மார்கள்போல் - வரைவின் மகளிரைப்போன்று, புண்ணியம் உலர்ந்தபின் - ஆகூழ் கழிந்தவுடனே, எண்ணிலள் - அவர்தம் கேண்மையை நினையாதவளாய், இகந்திடும் - நீங்கிப்போவாள், யாவர் தம்மையும் - எத்திறத்தாரிடத்தும், நண்ணிய நண்பு இலள் - பொருந்திய அன்பு இல்லாதவள், நங்கை வண்ணம்-திருமகளின் தன்மை இஃதாம், (எ- று.) “கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிந் தற்று“ பொருள் உலர்ந்தவுடனே கணிகையர் தம்மை மருவிய மைந்தரைப் புறக்கணித்து விடுவது போன்று. திருமகளும் ஆகூழ் அகன்றவுடன் தன்னையுடையோரை ஒருவி நீங்குவள் என்க. | ( 15 ) | | |
|
|