நிலமகளின் இயல்பு

2087. நிலமக ணிலைமையு நெறியிற் 1கேட்டிரேல்
குலமிலர் குணமில ரென்னுங் கோளிலள்
வலமிகு சூழ்ச்சியார் 2வழியண் மற்றவள்
உலமிகு வயிரத்தோ ளுருவத் தாரினீர்.
 
     (இ - ள்.) உலம் மிகு வயிரத்தோள் - குண்டுக்கல் போன்று பருத்த திண்ணிய
தோளையுடைய, உருவத் தாரினீர் - அழகிய மாலையணிந்த மைந்தீர்!, நிலமகள்
நிலைமையும் - நிலமடந்தையின் இயல்பினையும், நெறியில் கேட்டிரேல் - முறையானே
வினவுதிராயின், மற்றவள் - அந்நிலமகள், குலமிலர் - இவர் உயர்குடிப் பிறந்தாரல்லர்,
குணமிலர் - இவர் நற்குணங்களை உடையர் அல்லர், என்னும் - என்று கருதிப்பார்க்கும்.
கோள் இலள் - கொள்கை இல்லாதவளாய், வலம் மிகு சூழ்ச்சியார் - ஆற்றல்மிக்க
சூழ்வினையுடையாரின், வழியள் - வழிச்செல்பவள் ஆவள், (எ - று.)

     தன்னைப் பெரிதும் காதலித்து வருந்தித் தனக்கு நாயகனாகிய மன்னன் பகைவரால்
கொல்லப்பட்ட பொழுதே நிலம் மற்றொருவனுக்கு உரிமையாய் விடும் நற்குணமுடைய
அரசனிடத்திலேதான் நிலம் நிலைத்திருக்கும் என்பதுமில்லை; நற்குணமில்லாவிடினும்,
உடல்வலி படைவலி மிக்கவர்களுக்கே நிலம் உரிமையுடையதாகும். ஆதலால், நிலச்
செல்வம் போற்றப்படத் தகுந்த மாண்புடைய தாகாது என்பதாம்.
 

( 19 )