2089. வெற்றிவேன் மணிமுடி வேந்தர் தம்மொடும்
1உற்றதோ ருரிமைக ளில்லள் யாரொடும்
பற்றிலள் பற்றினார் பால ளன்னதால்
முற்றுநீர்த் துகிலுடை முதுபெண் ணீர்மையே.
 
     (இ - ள்.) வெற்றி வேல் மணிமுடி வேந்தர் தம்மொடும் - தன்னை யாண்டும்
காத்தோம்பும் உரிமையுடைய வெற்றிமிக்க வேல் ஏந்தும் அழகிய முடியையுடைய
அரசரிடத்தேயும், உற்றது ஓர் உரிமைகள் இல்லள் - பொருந்திய ஒரு சிறிது உரிமையேனும்
உடையவள் அல்லள், யாரொடும் பற்றிலள் - எத்தகையோரிடத்தும் கேண்மையுடையாளும்
அல்லள், பற்றினார் பாலள் - தன்னை வலிந்து பிடித்துக் கொள்வோர்மாட்டு வதிபவள்,
முற்றுநீர்த் துகிலுடை முது பெண் நீர்மை அன்னது - நிறைந்த நீரையுடைய கடலாகிய
ஆடையை உடுத்த முதிய நிலமடந்தையின் தன்மை அத்தகையதாம், ஏ, ஆல் : அசைகள்,

முற்றுநீர் - வளைகடல் எனினுமாம். ஓர் என்பது ஈண்டு சிறுமை குறித்து நின்றது. “ஒருசில“
என்புழிப்போல, அசையெனினுமாம். முது பெண் என்ற குறிப்பால், நிலம் பண்டும் பண்டும்
எண்ணிறந்தோராற் காதலிக்கப்பட்ட தென்றும் அவர்களிடத்தே நிலத்திற்குப்
பற்றிலாமையால் அஃது, அவர்களை ஒரீஇப் புதியவர்பால் அடிக்கடி மாறுவதாய் மிகப்
பழைமை யுடையதும் பலரால் நுகர்ந்துவிட்டதுமாகிய எச்சிலே என்றும் உணர்த்தப்பட்டன,
கிழவி என்றிகழ்ந்தபடியுமாம்.

( 21 )