(இ - ள்.) அழல்கொடி எறித்தொறும் - தீச்சுடர் வீசியெறிக்குந்தோறும், சுடரும் - ஒளிமிகுகின்ற, நிழல்ஆடகம் கொடி அதுஎன - ஒளியுள்ள நீண்ட பொன் கம்பியைப்போல, நிறைந்த காரிகைக்குழல்கொடி அனையவள் - நிறைந்த அழகையும் கூந்தலையும் உடையவளும், கொடியைப் போன்றவளுமாகிய சுயம்பிரபை, கொண்ட நோன்பினால் - தான்மேற் கொண்ட நோன்புச் செயலால், எழிற்கொடி - அழகுக்கொடியானது, சுடர்வது - விளங்குகின்றாற் போன்ற, ஓர்இயற்கை எய்தினாள் - ஒப்பற்ற இயற்கை யழகை யடைந்தாள் (எ - று.) நெருப்பிலிட்டுப் புடம்வைத்துச் சுடச்சுடப் பொன்மாசு நீங்கி ஒளி மிகுவதைப்போல, சுயம்பிரபை தான் மேற்கொண்ட நோன்பைக் கடைப் பிடித்தலாகும் துன்பம் வருத்த வருத்தத் தீவினை நீங்குதலால், மனக்கலக்க மின்றி அறிவொளி பெற்றுத் தெளிய உடலொளி மிகுந்தவளாகி விளக்க முற்றனளென்பதாம். “சுடர்ச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பம், சுடச்சுட நோற்கிற் பவர்க்கு“ என்னுந் திருக்குறள் ஈண்டு எண்ணத்தக்கது. முதலடியிற் கொடி உவமையாகுபெயராய், நீண்டு வளைந்து அசையும் இயல்பையுடைய தீச்சுடரைக் குறித்து நின்றது. இரண்டாம் அடியில் கொடியது - அது பகுதிப் பொருள் விகுதி. குழற்கொடி என்று மூன்றாம் அடியிற் கூறியது இல்பொருளுவமை. நான்காம் அடியில் எழிற்கொடி - இரவில் எரிவதான அழகிய ஒரு கொடியெனவும்; மின்னற் கொடியெனவும் கொள்ளலாம். |