2090. | அடிமிசை யரசர்கள் வணங்க வாண்டவன் பொடிமிசை யப்புறம் புரள விப்புறம் இடிமுர சதிரவொ ரிளவ றன்னொடு கடிபுகு மவளது கற்பின் வண்ணமே. | (இ - ள்.) அடிமிசை அரசர்கள் வணங்க ஆண்டவன் - தன் அடிகளில் மன்னர்பலர் வீழ்ந்து வணங்குமாறு தன்னை ஆட்சிசெய்த தன் தலைமகன், பொடிமிசை அப்புறம் புரள - மணலின்மேல் ஒருபக்கத்தே பிணமாகிப் புரண்டு கிடக்கும் பொழுதே, இப்புறம் - இன்னும் ஒரு பக்கத்தே, ஓர் இளவல் தன்னொடு - தன்னைப் புதுவதாகப்பற்றிய ஓர் இளமையுடைய தலைமகனோடே, இடிமுரசதிரக் கடிபுகும் - இடிபோன்று முரசம் முழங்காநிற்பத் திருமணம் புணர்வாள், அவளது கற்பின் வண்ணம் ஏ - அந்நிலமடந்தையின் கற்புடைமை இவ்வாறிருந்தது, (எ - று.) கற்பு என்றது இகழ்ச்சிக் குறிப்பு. தன்னொடு பொருந்தி நீண்ட நாள் இன்புற்ற கணவனாகிய அரசன் இறந்த பொழுதே ஒருசிறிதும் இரக்கமின்றி அயலானைச் சேர்ந்து மகிழும் வரைவின்மகள் நிலமகள் என்றபடி. | ( 22 ) | | |
|
|