2091. | இன்னன விவடன தியற்கை யாதலால் அன்னவள் பொருளென வார்வஞ் செய்யன்மின் மன்னுயிர் காவனும் மக்க டாங்கினால் பின்னைநுங் கருமமே பேணற் பாலிரே. | (இ - ள்.) இன்னன இவள் தனது இயற்கை ஆதலால் - இவை இந்நிலமகளின் தன்மையாக இருந்தவாற்றால், அன்னவள் - அந்நிலமகளை, பொருள் என - உறுதிப் பொருளாகக் கருதி, ஆர்வம் செய்யன்மின் - விரும்பா தொழியுங்கோள், மன் உயிர் காவல் - உலகில் மன்னிய உயிரைக் காத்தற் றொழிலாகிய அரசியலை, நும்மக்கள் தாங்கினால் - உங்கள் மக்கள் தக்கபருவம் எய்தி ஏற்று நடத்துவாராயின், பின்னை நுங்கருமமே பேணற் பாலிர் ஏ - அதன்மேல் நீயிர் உங்கட்குச் சிறந்துரிமையுடைய தவத்தொழிலையே மேற்கொண்டு போற்றி ஒழுகுமின், (எ - று.) “தவம் செய்வார் தங்கருமம் செய்வார்மற் றல்லா ரவஞ்செய்வா ராசையுட் பட்டு“ என்பவாகலின், தவம் பேணுமின் என்பான் அதன் பெருமை தோன்ற “நுங்க ருமமே பேணற் பாலிர்“ என்றான்.பல பிறவிகளினும் தவத்தை விரும்பி அவ்வழி முயன்று அடிப்பட்டு வந்த உள்ளமுடையார்க் கன்றிப் புதுவதாய்த் தவத்தை மேற்கொண்டு முற்றுவித்தல் இயலாதென்பவாகலின் நீயிர் இப்பிறவியிலேயே தவ வொழுக்கத்திற்கு வித்திடுமின் என்றான் என்க. | (23) | | |
|
|