2094. என்றலு மிளையவ ரிறைஞ்சிக் கைதொழு
தின்றியா மடிகளைப் பிழைத்த தென்னென
ஒன்றுநீ ரிலீரென வுரையொ ழிந்தரோ
அன்றவர்க் கயலவ னாகிச் செப்பினான்.
 
     (இ - ள்.) என்றலும் - என்று அரசன் கூறியவுடனே, இளையவர் கை தொழுது
இறைஞ்சி - இளமையுடைய விசய திவிட்டர்கள் கைகூப்பிக் கும்பிட்டு வணங்கி, இன்றுயாம்
அடிகளைப் பிழைத்தது என் என - இப்பொழுது எளியேங்கள் அடிகளார்க்கு இயற்றிய
பிழை யாதோ என்று கூற, ஒன்றும் நீர் இலீர் என - ஒரு பிழையேனும் எமக்கு நீயிர்
செய்திலீர் என்று, அன்று அவர்க்கு அயலவன் ஆகி - அன்றே அம்மக்கட்குத் தான்
தந்தையாகாது பற்றுவிட்டு அயலான் ஆகி நின்று, உரையொழிந்து - வேறு பிறமொழிகளைப் பேசுதலொழிந்து, செப்பினான் - விசயதிவிட்டர்கள் வினாவிற்கு விடைமாத்திரையே இறுத்தான், அரோ : அசை, (எ - று.)

  விசயதிவிட்டர்கள், தந்தையாகிய பயாபதி வேந்தன் துறவுமேற் கொண்டு தம்மைத் துறந்து
நீங்குவான் என்று எண்ணி, மனம் வருந்திப் புலம்புதலை நேரிற் கண்டும், அவர்
பொருட்டுத் தான் மனங்குழம்பாமல் நின்று பேசுதலின், அம்மன்னனுடைய பற்றறுதி
விளங்குவதாயிற் றென்க.

(26)