பயாபதியின் திருமுடி பாற்கடலில் இடப்படுதல்

2098. அருமுடி 1துறந்தன னரச னாயிடைத்
2திருமுடி மணித்துணர் தேவர் கொண்டுபோய்ப்
பருமுடி நிரையனப் பரவைப் பாற்கடல்
பெருமுடி யமைகெனப் பெய்யப் பட்டதே.
 
     (இ - ள்.) அருமுடி துறந்தனன் அரசன் - பெறலரும் முடியணியைப் பயாபதி
வேந்தன் அகற்றினனாக, ஆயிடை - அப்பொழுது, திருமுடி - அழகிய முடிக்கலன்மிசை,
மணித்துணர் தேவர் - அழகிய கற்பகப் பூக்கொத்தைச் சூடியுள்ள அமரர்களால், பருமுடி
கொண்டுபோய் - அப் பரிய முடியினை ஏந்திச் சென்று, நீரை அன பரவைப் பாற்கடல் -
வரிசையாக அன்னங்கள் நீந்துதலையுடைய அகன்ற பாற்கடலின் நாப்பண், பெருமுடி
அமைகென - பெரிய முடியே நீ இதன்கண் அமைவாயாக என்று கூறி, பெய்யப்பட்டதே -
விடப்பட்டது, (எ - று.)

     பெருமுடி : விளி வேற்றுமை. முடியைப் பெறாதவழிப் பெறுதலும். பெற்ற வழி அதை
இழக்கத் துணிதலும் மிக அரிதாகலின் - அருமுடி யென்றார். முடியைப் பாற்கடலில்
பெய்தனர் தேவர்கள் என்றது. அம்முடியின் அருமை, தெய்வத்தன்மை முதலியவற்றை விளக்கி நிற்றல் காண்க.
 

( 30 )