2102. காதல 1ராயினுங் காதல் கையிகந்
தேதில 2ராயின மடிகட் கின்றென
ஊதுலை மெழுகினின் றுருகி னாரவர்
போதலர் கண்களும் புனல்ப டைத்தவே.
 
     (இ - ள்.) காதலர் ஆயினும் - எளியேங்கள் காதல் கொள்ளற்குரிய மக்களாய்
இருந்தேயும், காதல் கையிகந்து - அக்காதல் ஒழிக்கப்பட்டு, இன்று - இற்றைக்கு, அடிகட்கு
- எம் தந்தைக்கு, ஏதிலராயினம் - அயலாராய் ஆகிவிட்டோம், என - என்று கூறி, ஊது
உலை மெழுகின் - ஊதப்பட்ட கொல்லுலைத் தீயின் இட்ட மெழுகைப் போன்று, நின்று
உருகினார் - நின்ற நிலையில் நின்றே உளம் உருகுவாராயினர், அவர் - அவர்களுடைய,
போது அலர் கண்களும் - செந்தாமரை மலர்ந்தாலொத்த கண்களும், புனல் படைத்த -
துயர் மிகுதியால் நீரைப் பெருக்கின, (எ - று.)

     தனது துறவுக்கோலத்தைக் கண்டு அலறி அழுகின்ற தம்பால் பரிவு காட்டாத பயாபதி
எமக்கு இன்று தொடர்பில்லாத அயலார்களைப் போலவே ஆயினர் என்று கூறி
விசயதிவிட்டர்கள் வருந்தினர் என்பதாம்.
 

( 34 )