விசயதிவிட்டர்கட்கு முனிவர் கூறும் தேற்றரவு | 2105. | நின்றிலா நிலைமையி னீங்கி நின்றதோர் வென்றியா லுலகுடன் வணக்கும் வீரியம் இன்றுகோன் புரிந்ததற் கிரங்கல் வேண்டுமோ என்றுதா னிளையரை முனிவர் தேற்றினார். | (இ - ள்.) நின்றிலா நிலைமையின் நீங்கி - நிலையுதலில்லாததோர் உலகியல் வாழ்வின் நிலையினின்றும் அகன்று, நின்றதோர் வென்றியால் - நிலைத்து நிற்றலைப் பெறுவதொரு வெற்றி பெறுமாற்றானே, உலகுடன் வணக்கும் வீரியம் - உலகம் எல்லாம் தன்னை வணங்குமாறு செய்துகொண்ட பேராண்மையை, இன்று கோன் புரிந்ததற்கு -இன்று அரசன் செய்தமைக்கு, இரங்கல் வேண்டுமோ -(மகிழ்தல் நிற்க) வருந்துதலும் வேண்டுமோ, என்றுதான் - என்று எடுத்துக்கூறி, இளையரை - விசய திவிட்டர்களை, முனிவர்-துறவி, தேற்றினார் - தேற்றரவு செய்தனர், (எ - று.) பயாபதிக்கு அறவுரை கூறிய துறவியார், விசயதிவிட்டர்களை நோக்கி, 'உங்கள் தந்தை, மேற்கொண்டுள்ள செயல் அவர்க்கு மேலும் நன்மையே விளைவிக்கும் ஆதலின் இச்செயல் தொடங்கியதற்குப் பெரிதும் மகிழவேண்டும், அப்படி இருக்கவும் நீங்கள் இவ்வண்ணம் துயருறுதல் தகுதியாகாது' என்று கூறித் தேற்றினார் என்க. | ( 37 ) | | |
|
|