வேற்படை பயாபதியை வணங்கி மீள்தல்

2108. பாற்படு செல்வமும் பரவை ஞாலமும்
காற்பொடி யாகவுங் கருதிற் றின்மையால்
ஏற்புடைத் தன்றுநம் மடிமை யீண்டென
வேற்படை வீரனைத் தொழுது மீண்டதே.
 
     (இ - ள்.) பால் படு செல்வமும் - பலபகுதிப் படுகின்ற செல்வங்களையும், பரவை
ஞாலமும் - விரிந்த உலகத்தையும், காற் பொடி யாகவும் கருதிற்று இன்மையால் - தன்
காலின்கட் கதுவிய துகட்டுணையும் பொருளாக மதித்தல் இல்லாமையினாலே, ஈண்டு நம்
மடிமை ஏற்புடைத்து அன்று -இவ்விடத்தே நமது அடிமைத் தொழிலும் மன்னனால் ஏற்கும்
தகுதியுடையதன்று, என - என்று கருதி, வேற்படை - வேற்படையும், வீரனைத் தொழுது
மீண்டது ஏ - பயாபதி மன்னனை வணங்கிப் போயிற்று, (எ - று.)
வேற்படை - பயாபதிக்கு அதுகாறும் ஏவல் செய்துவந்த வொருவேல். வேலேந்திய படைஞர்
எனினுமாம்.

     மெய்யுணர்வுடைய துறவிப் பெரியோர் தம் உடலையும் மிகை என்று எண்ணும்
இயல்புடையர்; பிற பொருள்களை அவர் பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்ளார். ஆகலின்,
பயாபதி வேந்தனுடைய தெய்வத் தன்மையுடைய வேல் இனி யாம் அரசற்கு மிகை என்று
எண்ணி வணங்கிப் போய்விட்டது என்பதாம்.
 

( 40 )