பொருளின் இயல்பு | 2110. | குணப்படை யிலக்க 1மெண்பான் குலவுநான் காகுஞ் சீலக் கணப்படை பதினெட் டாகு மாயிரங் கருவி யாகத் துணைப்படை பிறர்க்குச் செய்யுந் 2துன்னயத் தளவு நீக்கி மணப்புடை சிந்தை யென்னு மடந்தையைச் செறிய வைத்தான். | (இ - ள்.) குணப்படை இலக்கம் எண்பான் நான்கு ஆயிரம் ஆகும் - எண்பத்து நான்கு நூறாயிரம் வகையவாகிய குணவிரதங்கள் என்னும் படைகளையும், சீலக் கணப்படை பதினெட்டாகும் ஆயிரம் - ஒழுக்க விரதத்தின் கூட்டமாகிய பதினெண்ணாயிரம் வகையவாகிய படைகளையும், கருவியாக - தனக்குத் துணைப்படையாக மேற்கொண்டு, பிறர்க்குத் துணைப் படைசெய்யும் - தன் பகைவராகிய வினைவருக்குத் துணைப் படையாய் வந்து உதவி செய்யாநின்ற, துன் நயத்து அளவும் நீக்கி - பொருந்திய மித்தியா நயத்தினது பெருக்கத்தையும் தவிர்த்து, மணப்பு உடைச் சிந்தை என்னும் தன்னொடு - மணத்தலையுடைய தியானம் என்னும், மடந்தையை - மகளை, செறிய வைத்தான் - நெருங்கும்படி காவலாக வைத்தான், (எ - று.) துன்னயம் - மித்தியாநயம். சிந்தை - மனம். குணவிரதங்களின் விரி எண்பத்து நான்கு நூறாயிரம் என்றும், சீல விரதத்தின் விரி பதினெண்ணாயிரம் என்றும் கூறுப. இவற்றை விரிந்த நூல்களிற் கண்டுகொள்க. | ( 42 ) | | |
|
|