2112. | படைகெழு புரிசை வெல்வார் புறநின்று பதின்மர் காக்க விடையவர் தம்மு ளாரே யுழையரீ ரறுவ ராக உடையதன் னுலக மூன்று மொருவழிப் படுக்க லுற்று மிடைகெழு வினைவர் தானை மெலியமேற் சென்றுவிட்டான். | (இ - ள்.) படைகெழு புரிசை வெல்வார் - படைகள் செறிந்த மதில்களையுடைய பகைவரை வெல்லும் ஆற்றலுடைய, பதின்மர் புறம் நின்று காக்க - உத்தமக்ஷமை முதலிய பத்து அறவீரரும் வெளிப்புறத்தே நின்று காவல் செய்யவும், விடையவர் - காளைபோல்வர், தம் உளார் உழையர் ஈர் அறுவர் காக்க - தம்முள்ளேயே உள்ளிடத்தாரும் வெளியிடத்தாருமாய் இருவகைப்பட்ட தவம் என்னும் பன்னிருவரும் துணையாக, உடைய தன் உலகம் மூன்றும் ஒருவழிப்படுக்கலுற்று - தனக்கு உரியதாய் மூன்றுவகை வேற்றுமையுடைய உலகங்கள் அனைத்தையும் ஒன்றுபடச் செய்யும் பொருட்டு, மிடைகெழு வினைவர் தானை - மிக்குச் செறிந்த வினைப்பகைவர்களின் படை, மெலிய - மெலியுமாறு, மேற்சென்று விட்டான் - தவப்போர் மேற்கொண்டான், (எ - று.) உத்தமக்ஷமை, உத்தமார்த்தவம், உத்தம ஆர்ஜவம், உத்தம சத்தியம், உத்தம சௌசம், உத்தம சம்யமம், உத்தம தவம், உத்தம தியாகம், உத்தம ஆகிஞ்ஜின்யம், உத்தம பிரமசரியம் என்னும் பத்து அறங்களும் காவலாக அமைய என்றபடி. | ( 44 ) | | |
|
|