2113. பின்னணி யோகு நான்மை
     யபரகாத் 1திரம்பேற் றேனைத்
தன்னவ யவங்கண் முற்றித்
     தயங்குநூன் மனங்க ளோவா
துன்னிய திசையி னுய்க்கு
     முணர்வெனும் வயிரத் தோட்டி
இன்னியன் ஞான வேழத்
     தெழிலெருத் தேறி னானே.
 
     (இ - ள்.) பின் அணி - நால்வகைத் தியானங்களின் ஈற்றினின்ற அழகிய, யோகு
நான்மை அபரகாத்திரம் பெற்று - (பிருதக்துவ விதர்க்கவிசாரம், ஏகத்துவ விதர்க்க விசாரம்,
சூக்குமக் கிரியாபிரவிருத்தி, வியூபரதகிரியா நிவிருத்தி எனும்) சுக்லத் தியானத்தின்
கூறுபாடுகளின் கூட்டமாகிய நான்கு கால்களையுடையதாய், ஏனைத் தன் அவயவங்கள்முற்றி
- எஞ்சிய தன் உறுப்புக்களும் இலக்கணமுடையவாய் அமைந்த, இன் இயல் ஞானவேழத்து
- இனிய இயல்பமைந்த அறிவாகிய களிற்றினது, எழில் எருத்து - அழகிய பிடரின்கண்,
தயங்கு நூல் - திகழ்கின்ற மெய்ந்நூல்களால் உருப்பெற்றதும், மனங்கள் - பொறிகளை,
ஓவாது - ஒழியாமல், உன்னிய திசையின் உய்க்கும் - நினைத்த நெறியிலே செலுத்துவதும்
ஆகிய, உணர்வெனும் வயிரத் தோட்டி - மெய்யுணர்ச்சி என்னும் திண்ணிய
அங்குசத்தோடே, ஏறினான் ஏ - ஏறி யமர்ந்தான், (எ - று.)
 
யோகு - கூட்டம், அபரகாத்திரம் - கால்கள். மனங்கள் - ஈண்டுப் பொறிகட்கு
ஆகுபெயர்.
சுக்கிலத்தியானத்தின் நான்கு கூறுகளையும் கால்களாய்க்கொண்டு நடக்கும் மெய்யறிவாகிய
யானையில் ஏறினான் என்க.
யோகு - பரமாகமத்தின் பிரிவுகளாகிய பிரதமாநுயோகம் முதலிய நான்கும் எனினுமாம்.
தயங்கு நூல்களால் உறுதிபெற்ற உணர்வெனும் வயிரத் தோட்டி என்று இயைக்க.

( 45 )