2115. | நிறையிலார் பொறுத்த லாற்றா நிலையிது நிறைந்த நோன்மைக் கறையிலீ ராறுக் கொத்த 3கண்ணியர் கவரி 4வீச முறையினாற் பெருகு முள்ளச் சமாதிநீர் முறுக வுண்ட குறைவிலாத் தியான மென்னுங் கொற்றவா ளுருவிக் கொண்டான். | (இ - ள்.) நிறையிலார் - மூவகை அடக்கமும் இலாதார், பொறுத்தல் ஆற்றா நிலையிது - தாங்குதல் இயலாத இவ்வுயரிய நிலையின்கண் நின்று, நிறைந்த நோன்மை - பெருகிய ஆற்றலுண்மையால், கறையில் ஈர் ஆறுக் கொத்த கண்ணியர் - குற்றமற்ற பன்னிருவராகிய மாலையினையுடையார், கவரிவீச - சாமரையிரட்டாநிற்ப, முறையினாற் பெருகும் உள்ளச் சமாதி நீர் முறுக உண்ட - படிப்படியாக மிகாநின்ற மெய்யுணர்ச்சி யென்னும் அமிழ்தநீரை மிக்குண்ட, குறைவிலாத் தியானம் என்னும் - குற்றமற்ற தியானம் என்று கூறப்படும், கொற்றவாள் உருவிக் கொண்டான் - வெற்றிக்குக் காரணமான வாளை உறை கழித்துக் கைக்கொண்டான், (எ - று.) பன்னிருவர் - துவாதாசாநுப் பிரேக்ஷைகள். தரும சுக்கிலத் தியானப் பயிற்சியே நாளடைவில் உயிரின் குற்றங்களைக் தேய்த் தொழித்தற்குரிய கருவியாதலின் “தியான வாள்“ என்றார். அநுப்பிரேக்ஷைகள் பன்னிரண்டும் கவரியிரட்டும் மகளிராக உருவகிக்கப்பட்டன. | ( 47 ) | | |
|
|