2116. விண்கடாஞ் செய்யும் வெய்ய
     வினைவர்கட் கரண மாகிக்
கண்கடா மறைக்கு மோரேழ்
     கடிவினை பொடிசெய் திட்டே
1எண்கடா நவின்ற வீரெண்
     கொடிமதிற் கோட்டை கட்டி
எண்கடா முடைய வெண்மர்
     குறும்பரை யெறிந்து வீழ்ந்தார்
 
     (இ - ள்.) விண்கள் தாம் செய்யும் வெய்ய - வீண்செயல்களையே செய்யாநின்ற
கொடிய, வினைவர்கட்கு - இருவினைப் பகைவர்கட்கு, அரணமாகி - காவலாகப் பொருந்தி,
கண்கடாம் மறைக்கும் - ஞானக்கண்களை மறையாநின்ற, ஓர் ஏழ் கடிவினை பொடி
செய்திட்டு - ஓர் ஏழாகிய கொடிய தரிசனமோகநீயம் என்னும் வினைகளைச் சுட்டுத் துகள்
செய்து, எண்கள் தாம் நவின்ற - எண்ணிக் கூறப்பட்ட, ஈர் எண்கொடிமதில் கோட்டை
கட்டி - சோடச கர்மமென்கிற கொடியையும் மதிலையும் உடைய வலிய கோட்டையைக்
கட்டிக்கொண்டு, எண்கள்தாம் உடைய எண்மர் குறும்பரை யெறிந்து வீழ்த்தார் -
ஆராய்தற்கு உரிய பிரத்யாப்பிரத்தி யாக்யானம் என்னும் எட்டுக் கயவர்களையும் கொன்று
தள்ளினான், (எ - று.)
எண்கடாம் உடைய எண்மர் குறும்பர் என்றது, வெகுளி முதலிய வற்றை. விளக்கம்
அடுத்த செய்யுள் விரிவுரையிற் காண்க.
( 48 )